பாத்தபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நேற்று கிராம சபை கூட்டம் வட்டார வளர்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதில் பாத்தபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அரசு பற்றாளராக லட்சுமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் முடிய பொது செலவீனமாக ரூ.19 லட்சத்து 98 ஆயிரத்து 763 என ஊராட்சி சார்பில் கணக்கு காட்டப்பட்டது. அதுவும் தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிதண்ணீர் குழாய் போன்றவற்றுக்கு மேற்கண்ட ரூ.19 லட்சம் ஒரு வருடத்தில் அதிக அளவில் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலையான பயன்பாட்டை தவிர்த்து வெறும் பராமரிப்பு பணிக்காக மட்டும் இத்தனை லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கும் முறையான கணக்கு காண்பிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கிராம மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.
கிராம மக்கள் பதிவேடு புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், செலவு கணக்கு புத்தகங்களுடன் நின்றவாறு முறையான செலவீனங்கள் இல்லை என புகார் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 3 மணி நேர பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story