விலை வீழ்ச்சியால் தோட்டத்தில் பறிக்காமல் விடப்படும் சம்பங்கி பூக்கள்


விலை வீழ்ச்சியால் தோட்டத்தில் பறிக்காமல் விடப்படும் சம்பங்கி பூக்கள்
x
தினத்தந்தி 2 May 2022 10:16 PM IST (Updated: 2 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

விலை வீழ்ச்சியால் சம்பங்கி பூக்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டுள்ளனர்.

கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்து ஆவாரம்பட்டி, மயிலாப்பூர், அனுப்பபட்டி, சாமியார்பட்டி, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகிற பூக்கள், விற்பனைக்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் தற்போது பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இதுகுறித்து குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த பூ விவசாயியும், பட்டதாரியுமான வர்கீஸ் கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிட்டுள்ளேன். தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.500-க்கு விற்பனையானது. தற்போது விலைவீழ்ச்சி அடைந்து ரூ.3-க்கு வாங்குகின்றனர். பூப்பறிக்க கூலி கொடுக்க கூட விலை கட்டுப்படியாகவில்லை. இதனால் பூ விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உழவு, உரம், கூலி என ஏக்கருக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருக்கிறேன். விலை வீழ்ச்சியால் வருமான இழப்பு ஏற்பட்டதோடு கடனாளி ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகசூல் காலத்தில் ஒரு ஏக்கருக்கு தினமும் 120 கிலோ பூக்கள் பறிக்கலாம். ஆனால் ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுவதால், தோட்டத்தில் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டேன். எனவே விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே பூ விவசாயிகளை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story