தளிகை கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தளிகை கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நாமக்கல்:
தளிகை கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை
நாமக்கல் தாலுகா தளிகை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தளிகை குடித்தெருவில் 65 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைத்து எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பொதுமக்களாகிய நாங்கள் இந்த குடிநீரை தினசரி குடித்து வருகிறோம். தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து அதிகாரிகள் இணைப்பை துண்டிக்க வந்தனர். நாங்கள் குடிநீர் இணைப்பை துண்டிக்க மறுத்ததால், குடிநீர் வழங்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
மாணவ, மாணவிகள்
இதனால் நாங்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். சுமார் 2 கி.மீட்டர் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால் அன்றாட பணிகளை குறித்த நேரத்தில் செய்ய முடியவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குறித்த நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை.
எனவே குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து வழங்கும் குடிநீரை மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மூலம் வழங்காமல், ஏற்கனவே வழங்கியது போல எங்கள் பகுதியில் உள்ள தரைமட்ட தொட்டி மூலம் குடிநீர் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story