மாவு மில் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த 2 பேர் கைது


மாவு மில் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2022 11:11 PM IST (Updated: 2 May 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மாவு மில் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாவு மில் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கத்தியை காட்டி மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகுருசாமி (வயது 32). நாகர்கோவில் இடலாக்குடியில் உள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பாலகுருசாமியை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் பாலகுருசாமி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தை சேர்ந்த தனபால் (56) என்பவரிடம் 2 பேர் பீடி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அவரை கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதுபற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாவல்காடு நம்பியான்குளத்தை சேர்ந்த இர்வின் ஜெயகுமார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இர்வின் ஜெயகுமாரும், லீபுரம் கல்லுவிளை காலனியை சேர்ந்த சார்லி என்ற செல்வ கார்த்திக் (27) என்பவரும் சேர்ந்து தனபாலை கத்தியால் குத்தியது தெரியவந்தது. மேலும் சார்லி, கருப்புகோட்டையை சோ்ந்த சிவா என்பவருடன் சேர்ந்து மாவு மில் ஊழியரான பாலகுருசாமியிடம் ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்ததும் தெரியவந்தது.
பல்வேறு வழக்குகள்
இதைத் தொடர்ந்து சார்லி மற்றும் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான சார்லி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Next Story