ராமகுளம் கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு
அமராவதி அணையில் இருந்து ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தளி
அமராவதி அணையில் இருந்து ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குடிநீர் திட்டங்கள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களைக்கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் அணைக்கு கைகொடுத்து உதவியது. அத்துடன் அவ்வப்போது சீரான இடைவெளியில் மழைபொழிவும் ஏற்பட்டு வந்ததால் அமராவதி அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது.
தண்ணீர் திறப்பு
இதையடுத்து ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்கால் 2-ம் போக பாசனத்திற்கு 120 நாட்களில் (65 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) உரிய இடைவெளிவிட்டு அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்தி நெல் சாகுபடியை தொடங்கினார்கள். தற்போது நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து, கதிர்கள் பிடித்து நெல்மணியில் பால் ஏறி வருகிறது.
இந்த சூழலில் கடந்த மாதம் 24-ந்தேதியுடன் பாசனத்திற்கான கெடுவும் முடிவடைந்து விட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல் சாகுபடியில் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துருவை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
அதன்பேரில் நேற்று முன்தினம் முதல் வருகின்ற 15-ந் தேதி வரை (10 நாட்கள் தண்ணீர் திறப்பு 5 நாட்களுக்கு அடைப்பு) கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
உதவிப்பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறந்துவைத்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும்.நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 57.02 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story