அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது
அக்னி நட்சத்திரம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது.
புதுக்கோட்டை:
சுட்டெரிக்கும் வெயில்
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. சமீபத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலையில் நடந்து செல்பவர்கள் பலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகளை பிடித்தப்படி செல்கின்றனர். இளம்பெண்கள் துப்பட்டாவால் தலை மற்றும் முகத்தை மூடியபடியும், பெண்கள் சிலர் சேலையால் தலையை மூடியபடியும், வயதான முதியவர்கள் துண்டால் தலையை மூடியபடியும் செல்வதை காணமுடிகிறது. இதேபோல இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களில் சிலர் குடைகளையும் பிடித்து செல்கின்றனர். சிலர் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க ‘கூலிங் கிளாஸ்’ அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர்.
அக்னி நட்சத்திரம்
புதுக்கோட்டையில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ள நிலையில் பகலில் வீட்டை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் மாலை நேரத்திலும், இரவிலும் எதிரொலிக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் புழுக்கமான நிலை காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலை கண்டு பொதுமக்கள் அப்பப்பா... என்னா வெயிலு... என புலம்பிவருகின்றனர்.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை (புதன்கிழமை) தொடங்கி 28-ந் தேதி முடிவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது வெயில் அதிகமாக உள்ள நிலையில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலை எப்படி சமாளிக்க போகிறமோ? என பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
குளிர்ச்சி தரக்கூடிய உணவுகள்
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு பழக்க வழக்கங்களை கையாள தொடங்கி உள்ளனர். தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு, நுங்கு, இளநீர், பழச்சாறு வகைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அன்றாட உணவு பழக்கமாக சேர்த்து கடைப்பிடித்து வருகின்றனர்.
மேலும் தாகத்தை தீர்க்க தண்ணீர் அதிகம் குடிக்கின்றனர். ஒரு சிலர் காலையில் குளிப்பது மட்டுமில்லாமல், இரவிலும் ஒரு குளியல் போட்டு உறங்குகிறார்கள்.
டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரிப்பு
கோடை காலம் தொடங்கிய நிலையில் மதுப்பிரியர்கள் பலர் கூலிங் பீர் வகைகளை வாங்கி அருந்தி வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. இதற்காகவே கடைகளில் உள்ள பெரிய பிரீஷர்களில் பீர் பாட்டில்களை அதிகம் அடுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். ‘ஹாட்’ ரக மதுபானங்களை அருந்தினால் சிலருக்கு உடலில் ஒவ்வாமை ஏற்படும். இதனால் இதுபோன்ற மதுபான வகைகளை அருந்தும் பழக்கம் கொண்டவர்களில் சிலர் இதனை தவிர்த்து குளிர்ச்சியான பீர்களை அருந்துகின்றனர். இருப்பினும் மதுப்பிரியர்கள் அதே ‘ஹாட்’ ரக மதுபானங்களை வாங்கியும் அருந்தி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் சராசரியாக உள்ளது.
Related Tags :
Next Story