குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 May 2022 12:01 AM IST (Updated: 3 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர், 
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இக்கூட்டத்தில் 348 மனுக்கள் பெறப்பட்டன. 
குடிநீர் வசதி
கூட்டத்தில் குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமத்திற்கு உட்பட்ட 12-வது வார்டு பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமத்திற்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக வடக்கு தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றோம். மேலும் எங்களது தெருவில் இதற்கு முன்பு ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக உப்பு தண்ணீர்தான் வந்தது. தற்போது அதுவும் வரவில்லை. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சிமெண்டு சாலை பணியினை முழுமையாக அமைத்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கழிவறைகள்
விடுதலைக்களம் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் பஸ் நிலையத்தில் உள்ள சிறுநீர் கழிக்கும் கழிப்பிடங்கள் தண்ணீர் வசதியின்றி போதிய பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கரூர் மாநகராட்சியாக தரம் உயர்ந்திருந்தாலும், கழிவறைகள் தரம் உயராமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பஸ் நிலையம் தீராத நோய்க்கிருமிகளை பரப்பும் இடமாக கழிவறைகள் இருப்பது வேதனையாக உள்ளது. வெளியூர் பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் கழிவறைகள் அமைத்து சுத்தமான, சுகாதாரமான பராமரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சிறப்பு மாதிரி பொது கழிவறைகள் உருவாக்க வேண்டும். கரூர் பஸ்நிலைய கழிப்பிடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத குவாரிகள்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம் முழுவதும் 350-க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கவில்லை. சுமார் 200-க்கும் அதிகமான குவாரிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ளதாக தெரியவருகிறது. இதில் பல குவாரிகள் அனுமதி காலம் முடிந்தும் இயங்கி வருகிறது. சில குவாரிகள் அனுமதியில்லாமல் இயங்கி வருகிறது. 
இதுகுறித்து பல புகார்கள் மாவட்ட புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சட்ட விரோத குவாரிகளின் செயல்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே மாவட்ட கலெக்டர் சீரிய நடவடிக்கை எடுத்து அனுமதியில்லாமல் இயங்கி வரும் குவாரிகளையும், அனுமதி முடிந்து இயங்கி வரும் குவாரிகளையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story