தந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
தந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க ஒரு பெண், முதியவருடன் வந்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் பையை போலீசார் சோதனை செய்ததில் பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் குன்னம் தாலுகா, புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த ஞானம்மாள்(வயது 40) என்பதும், அவருடன் வந்திருந்தது அவருடைய தந்தை ராமசாமி(80) என்பதும் தெரியவந்தது. ஞானம்மாளுக்கு 3 அண்ணன்கள், 3 தங்கைகள் உள்ளனர். மேலும் ஞானம்மாளுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் அண்ணன்கள் 3 பேரும் தந்தையை ஏமாற்றி, அவரின் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு, ஞானம்மாளுக்கு நகை எதுவும் போடாமலும், குறைந்த அளவு நிலம் மட்டும் கொடுத்ததாகவும், தற்போது தந்தையுடன் குடியிருக்கும் ஞானம்மாளை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும், வீட்டின் ஓட்டை உடைத்து சேதப்படுத்தி ஒரு அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதுகுறித்து மங்களமேடு போலீசாரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, தந்தை குடியிருக்கும் வீட்டை, அவர் பெயருக்கு எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க மண்எண்ணெயை கலெக்டர் அலுவலகத்துக்கு ஞானம்மாள் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஞானம்மாள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, தனது தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story