கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், அச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், மாவட்டத்தில் உள்ள மருத்துவர் சமூக மக்களை குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்களை ஆதிக்க சமூகத்தினர் அடக்குமுறையுடன் கையாளுவது, துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் எங்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சமீபத்தில் லாடபுரம் கிராமத்தில் எங்கள் சமூகத்தை சேர்ந்த ராணி என்ற பெண்ணின் குடும்பத்திற்கும், அருகே வசிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு தகராறு ஏற்பட்டு, அந்த குடும்பத்தினர் ராணியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். புகார் கொடுத்தும் பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா, இனாம் அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் அச்சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர்-விவசாயம் பாதிக்கப்படும்
அப்போது அவர்கள் கூறுகையில், வேப்பந்தட்டை தாலுகாவில் ஓடும் கல்லாற்றின் தென்கரையில் நெய்குப்பை, புதூர், வி.களத்தூர், தைக்கால், அயன்பேரையூர், ஆற்றின் வடகரையில் பசும்பலூர், பிம்பலூர், வண்ணாரம்பூண்டி, இனாம் அகரம், திருவாலந்துறை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு தேவையான குடிநீர் கல்லாற்றில் இருந்து கிடைக்கிறது. மேலும் கல்லாற்றை சுற்றி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்த கல்லாற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மணல் குவாரி அமைத்தால் எங்களின் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டு 10 கிராமங்களில் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். எனவே கல்லாற்றில் அரசு மணல் குவாரி அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்ததன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவில்லை. இதனால் தற்போது மாற்று ஏற்பாடு மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே மீண்டும் அதே இடத்தில் கூடுதல் கொள்ளளவுடன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வேப்பந்தட்டை ஒன்றியம், உடும்பியம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் வந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பவர் பிளாண்ட் மூலம் புகை, சாம்பல் வெளியேறுவதை தடுக்க வேண்டும். உடும்பியத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் ஒரு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
244 மனுக்கள்
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 244 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Related Tags :
Next Story