மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு; ஈத்கா மைதானத்திற்கு நிலம் வழங்கிய இந்து விவசாயிகள்
தாவணகெரே அருகே அனகோடு கிராமத்தில் ஈத்கா மைதானத்திற்கு இந்துக்கள் நிலம் வழங்கிய சம்பவம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.
சிக்கமகளூரு: தாவணகெரே அருகே அனகோடு கிராமத்தில் ஈத்கா ைமதானத்திற்கு இந்துக்கள் நிலம் வழங்கிய சம்பவம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்து-முஸ்லிம் ஒற்றுமை
கர்நாடகத்தில் சமீப காலமாக மத ரீதியான மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு கிராமத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதும், அதன் ஆதாரமாக இந்து விவசாயிகள் வழங்கிய நிலத்தில் ஈத்கா மைதானம் அமைக்கப்பட்டுள்ள மதநல்லிணக்க சம்பவமும் நடந்துள்ளது.
அதுபற்றிய விவரம் பின்வறுமாறு:-
தாவணகெரே அருகே மாயகொண்டாவில் அனகோடு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர்.
அவர்கள் எந்த வித மதபாகுபாடும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அதன்படி அனகோடு கிராமத்தில் ஈத்கா மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தின் பின்பகுதியில் இந்து மதத்தை சேர்ந்த ராஜசேகரப்பா, ராஜப்பா ஆகிய 2 விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்துவதற்கு அரசு தடை விதித்தது.
இந்துக்கள் வழங்கிய நிலத்தில் ஈத்கா மைதானம்
இதற்கிடையே ஈத்கா மைதானத்தில் உள்ள தொழுகை கட்டிட சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. இதையடுத்து மீண்டும் ஈத்கா மைதான தொழுகை சுவர் கட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
மேலும் தொழுகை நடத்த போதிய இடம் இல்லாததால் அவர்கள், ராஜசேகரப்பா, ராஜப்பா 2 பேரிடம் சேர்த்து ½ ஏக்கர் நிலம் தரும்படி கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த 2 பேரும் ஈத்கா மைதானம் அமைக்க நன்கொடையாக நிலத்தை வழங்கினர். இதையடுத்து அந்த நிலத்தில் ஈத்கா மைதானம் அமைக்கப்பட்டது.
மதநல்லிணக்கம்
இந்த ஈத்கா மைதானத்தில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று ராஜசேகரப்பா, ராஜப்பா ஆகிய 2 பேரும் ஈத்கா மைதானத்ைத ஊர் முஸ்லிம் தலைவர்களுடன் சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த சம்பவம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story