மராட்டியத்தில் கன்னடர்கள் வாழும் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


மராட்டியத்தில் கன்னடர்கள் வாழும் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 2:36 AM IST (Updated: 3 May 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கன்னடர்கள் வாழும் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: மராட்டியத்தில் கன்னடர்கள் வாழும் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார். 

பெலகாவி மாவட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ளது பெலகாவி மாவட்டம். மராட்டிய மாநிலம் எல்லையில் உள்ள இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்களும் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். இதனால் பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக இருமாநிலங்கள் இடையேயும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், நேற்று முன்தினம் 62-வது மராட்டிய மாநிலம் உதயமான நாள் விழாவில் பேசும்போது, "நாம் 62-வது மாநில உதயமான தினத்தை கொண்டாடினாலும், கர்நாடகத்தின் பீதர், பால்கி, பெலகாவி, கார்வார், நிப்பானி  உள்ளிட்ட பகுதிகளில் மராத்தி மொழி பேசும் பகுதிகளை மராட்டிய மாநிலத்துடன் இணைக்க முடியவில்லை. 

இது வருத்தம் அளிக்கிறது. அந்த கிராமங்கள் மராட்டியத்துடன் சேர்க்கப்படும் வரை அங்கு போராடும் அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்றார்.

800 கிராமங்களை இணைக்க கோரிக்கை

பெலகாவியில் செயல்படும் மராட்டிய ஏகிகிரண் சமிதி, எல்லையில் உள்ள சுமார் 800 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறது. இதுகுறித்து மராட்டிய அரசிடம் அந்த அமைப்பு மனுவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அடிபணிய மாட்டோம்

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒட்டுமொத்த அரசும் சிக்கலில் இருக்கிறது. அதனால் அவர்கள் அச்ச உணர்வையும், எல்லை பிரச்சினையையும் ஏற்படுத்துகிறார்கள். அரசியல் ரீதியாக தங்களை நிலை நிறுத்தி கொள்ள அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. எல்லை பிரச்சினையில் கர்நாடகம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது.

எதற்காகவும் கர்நாடகம் அடிபணியாது. ஒருபோதும் நாங்கள் மராட்டியத்திற்கு அடிபணிய மாட்டோம். எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது மராட்டியத்திற்கும் தெரியும். மராட்டிய அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக எல்லை பிரச்சினையை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த பூச்சாண்டி காட்டுவதை நிறுத்த வேண்டும். கர்நாடகத்தில் இருந்து ஒரு அங்குல நிலம் கூட மராட்டியத்திற்கு விட்டு கொடுக்க மாட்டோம்.

கர்நாடகத்துடன் இணைக்க ஆலோசனை

மராட்டிய மாநில எல்லையில் பல்வேறு பகுதிகள் கன்னட மொழி பேசும் மக்கள் வசிக்கிறார்கள். அந்த பகுதிகளை கர்நாடகத்துடன் சேர்ப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story