சாலையோரம் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதில் பெண் பலி
சாலையோரம் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி ஜானகி (வயது 55). தேசிய ஊரக தொழிலாளியான இவர் நேற்று காலையில் பங்களாகுடியிருப்பில் நடைபெற்ற பணிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்த ஆரோன் மகன் அவினாஷ் (20), தேசிய ஊரக தொழிலாளியான தனது தாயாரை பங்களாகுடியிருப்பில் நடைபெறும் பணிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஜானகியின் சேலையானது காற்றில் பறந்து, அவினாஷ் வந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததுடன் ஜானகியும் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த ஜானகி, அவினாஷ் ஆகியோரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜானகியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவினாசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story