பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் கடந்த மார்ச் மாதம் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 118 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உள்ளிருப்பு போராட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட உபரி பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பலர் தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேற்றுமாலை வந்தனர். பின்னர் இவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார், அதிகாரிகள் அவர்களுடன் சமசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் முதன்மைக்கல்வி அலுவலர் வரும்வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, 2 மாதங்களாக சம்பளம் வழங்காததால் வங்கிக்கடன்கள், கூட்டுறவு சங்க கடன்கள் ஆகியவற்றிற்கு மாத தவணை செலுத்த முடியவில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் போன்ற மருத்துவ செலவுகளுக்கும், பிள்ளைகளின் படிப்பு செலவுகளுக்கும் தவித்து வருகிறோம்.
எனவே பணி நிரவல் மூலம் சென்ற ஆசிரியர்களுக்கு புதிய பள்ளியில் பதிவுகள் மேற்கொள்ள காலதாமதம் ஆகும் என்பதால் பழைய பள்ளிகளிலேயே எங்களுடைய சம்பள கணக்கு தலைப்பின் கீழ் மாத சம்பளத்தை உடனடியாக பெற்று தர வேண்டும் என்றனர்.
இந்தநிலையில் முதன்மைக்கல்வி அலுவலர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்ததை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story