சேலத்தில் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை-தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
சேலத்தில் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருக்கும், கணவனை இழந்து தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் மணிமாறன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 17 வயது சிறுமி மீதும் மணிமாறனுக்கு ஆசை ஏற்பட்டது.
இதனால் அவர் அந்த சிறுமியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இவரது தொல்லை தாங்காமல், அந்த சிறுமி கடந்த ஆண்டு கோவையில் உள்ள உறவினர் பெண் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
போக்சோ சட்டத்தில் கைது
இந்த நிலையில், மணிமாறன் அடிக்கடி கோவைக்கு சென்று சிறுமியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது உறவினர் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து உள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கோவைக்கு சென்று சிறுமியை தன்னுடன் அனுப்புமாறு கூறி உள்ளார்.
இது குறித்து சிறுமியின் உறவினர் பெண் சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் மணிமாறனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.
2 ஆண்டுகளாக...
இது குறித்து போலீசார் கூறும்போது, சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். படிக்கும் போதே மணிமாறன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி அவர் சிறுமியை சீரழித்து உள்ளார். இதற்கு பயந்து சிறுமி கோவையில் உள்ள உறவினர் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் சிறுமிக்கு மணிமாறன், விடாமல் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார் என்று கூறினர்.
Related Tags :
Next Story