தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டில் புகுந்து 46 பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 46 பவுன் நகைகள்-ரூ.1¼ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 46 பவுன் நகைகள்-ரூ.1¼ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் சுடலைமுத்து (வயது 57), விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணமாகி தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சுடலைமுத்து, அவரது மனைவி மற்றும் மகன்கள் வீட்டின் கீழ்பகுதியை பூட்டிவிட்டு, மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலையில் எழுந்த சுடலைமுத்து கீழே வந்து உள்ளார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
46 பவுன் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த சுடலைமுத்து பீரோவை பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 46 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுடலைமுத்து தட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிகரமாக மர்ம நபர்கள் வீடு புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story