‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின் வாரியத்தின் துரித நடவடிக்கை
ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4-வது தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியின் உதிரி பாகங்கள் பழுதடைந்திருப்பது குறித்து, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்நிலையில் பழுதடைந்த உதிரி பாகங்கள், மின் வாரிய அதிகாரிகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.
குப்பைகளை இப்படியும் பயன்படுத்தலாமா?
வேலப்பஞ்சாவடி வழியே வானகரம் செல்லும் சாலை, குப்பை கழிவுகள் கொண்டு அகலப்படுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதி மாசடைந்து இருப்பதோடு, அந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள், முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- க.வசந்த், வேலப்பஞ்சாவடி.
புத்துயிர் பெற்ற சமுதாய கூடம்
சென்னை மணலி புதுநகர் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் இருக்கும் சமுதாய கூடம், கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் சமுதாய கூடம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதற்கு உதவியாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
பழுதடைந்த மின்கம்பம்
காஞ்சீபுரம் மாவட்டம் நடுவக்கரை கிராமத்தில், விவசாய கிணறுக்கு செல்லும் மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தாக காட்சியளிக்கிறது. வயல் வெளியில் இருக்கும் இந்த மின்கம்பம், எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்துவிட வாய்ப்பு இருப்பதால், விபத்துகள் ஏற்படும் முன்பு மின் வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன், நடுவக்கரை.
அலங்கோலமாகும் சாலை
சென்னை பெரம்பூர் என்.வி.நடராஜன் தெருவின் கடைசி பகுதியில், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில், பல ஆண்டுகளாக கட்டிட கழிவுகள் மற்றும் மரக்கட்டைகள் குவிந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, சாலையில் தேவையற்று குவிந்து கிடக்கும் இது போன்ற கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஆறுமுகம், பெரம்பூர்.
சேதமடைந்த சாலையால் அவதி
சேலையூரிலிருந்து கேம்ப் சாலை செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சாலையில் பயணம் செய்யவே மிகவும் சிரமமாக உள்ளதோடு, கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- தினேஷ், சேலையூர்.
நடைமேடையை ஆக்கிரமிக்கும் செடி, கொடிகள்
திருவள்ளூருக்கும், காக்களூருக்கும் இடையே இருக்கும் பாதாள சிவன்கோவில் அருகே, உள்ள நடைமேடையை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பூச்சிகள் தொல்லை அதிகரிப்பதோடு நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கணபதிராமன், காக்களூர்.
சாய்ந்த மின் கம்பத்தால் ஆபத்து
சென்னை சிட்லபாக்கம் நேரு நகர் பகுதியில் இருக்கும் மின் கம்பம், சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்துவிடும் நிலையுள்ளது. விபரீதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
- சுபாஷ் சந்தர், சிட்லபாக்கம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியை இரவில் கடந்து செல்லும்போது தெரு நாய்கள் குரைப்பதும், வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதும் தினமும் நடக்கிறது. இதனாலேயே, இரவில் இந்த பகுதியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். மக்களின் பயணம் சீராக அமைய தெரு நாய்கள் தொல்லை தடுக்கப்படுமா?
- சௌந்தர்ராஜன், கொளத்தூர்.
பகலிலும் எரியும் மின் விளக்கு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மின் விளக்கு, கடந்த சில நாட்களாக பகலிலும் எரிந்துகொண்டிருக்கிறது. மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், பகலில் எரியும் மின் விளக்கால் மின்சாரம் வீணாவதை தடுக்க மின் வாரியம் நடவடிக்கை எடுப்பது எப்போது?
- சக்திவேல், அச்சிறுபாக்கம்.
Related Tags :
Next Story