முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
கடலூர்,
முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளி வாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்து கொண்டனர்.
கடலூர் டவுன்ஹாலிலும் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் ஈதுல் பித்ரு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தது. நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி முகம்மது முஸ்தபா, டவுன் முகம்மது உசேன், ஆலடி ரோடு பத்ரு, ஜங்ஷன் சையத் இப்ராகிம், பெரியார் நகர் நூருல்லாகான், இந்திரா நகர் அன்சாரி, உலமாக்கள் சபியுல்லா மன்பயி, பத்தஹில்லா, நூர் முகமது, உஸ்மான், சவுகத் அலி, நூர் முகமது, இந்தியாஸ், சையத் இப்ராகிம் ஹைரி, அக்பர் அலி மற்றும் அனைத்து பள்ளி வாசல் முத்த வல்லிகள் கலந்து கொண்டனர். உலக நன்மைக்காகவும், அமைதி வேண்டியும் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
லால்பேட்டை
லால்பேட்டை ஈத்கா மைதானத்தில் உள்ள குத்பா பள்ளிவாசலுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்தனர். பின்னர் அங்கு கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியும், லால்பேட்டை அரபிக்கல்லூரியின் முதல்வருமான நூருல் அமீன் ஹஜ்ஜிரத் தலைமையில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு தொழுகை நடந்தது. அதை தொடர்ந்து அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் எள்ளேரி, ஆயங்குடி, காட்டுமன்னார்கோவில், ரம்ஜான் தைக்கால், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், கந்த குமரன் உள்பட முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக கொத்பா பள்ளிவாசலுக்கு வந்தனர். அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முஸ்லிம் பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் அன்னதானம் வழங்கினர்.
பரங்கிப்பேட்டை
இதேபோல் பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் உள்ள மீராபள்ளிவாசல், புவனகிரி பள்ளி வாசல், கிள்ளை, கோவிலம்பூண்டி, முட்லூர், பின்னத்தூர், பண்ருட்டி ஈத்கா மைதானம் மற்றும் சிதம்பரம் நடராஜா கார்டனில் உள்ள ஈத்கா திடலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
Related Tags :
Next Story