மயிலாடும்பாறை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை உடலை போலீசார் எடுக்கவிடாமல் பழங்குடியினர் போராட்டம்
கடமலைக்குண்டு அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை போலீசார் எடுக்கவிடாமல் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.
கடமலைக்குண்டு:
தூக்குப்போட்டு சாவு
கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கான 24 தொகுப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பை சுற்றிலும் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்ட உரிமையாளர்கள் பழங்குடியின மக்களை தங்கள் நிலத்திற்குள் வரக்கூடாது என்று அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பழங்குடியின மக்களுக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் பழங்குடியினத்தை சேர்ந்த கருப்பையா (வயது 60) என்ற முதியவர் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போராட்டம்
இதுகுறித்து அறிந்ததும் கடமலைக்குண்டு போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது கருப்பையாவின் உடலை போலீசார் எடுக்க விடாமல் அவரது மகள்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்ட உரிமையாளர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பையாவை கடுமையாக திட்டியதாகவும், அதன் காரணமாக கருப்பையா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்கொலைக்கு காரணமான தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் பழங்குடியின மக்கள் கருப்பையாவின் உடலை போலீசார் எடுக்க அனுமதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story