தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 3 May 2022 8:22 PM IST (Updated: 3 May 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

தேனி:

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகை வரும் ரமலான் மாதத்தை முஸ்லிம்கள் புனித மாதமாக கருதுகின்றனர். அந்த மாதத்தில் புனித நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அதன்படி ரமலான் மாதம் தொடங்கிய நாளில் இருந்து 1 மாத காலம் முஸ்லிம்கள் புனித நோன்பு கடைபிடித்தனர்.
இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழுகை நடத்தவும், பண்டிகைகள் கொண்டாடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் முஸ்லிம்கள் உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

சிறப்பு தொழுகை

அதையொட்டி தேனி மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அதன்படி தேனி புதிய பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் சம்சுதீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தேனி பழைய பள்ளிவாசலுக்கு அல்லிநகரத்தில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மல்கர்ஒலி தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர்  ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். மேலும் முஸ்லிம்கள் பலரும் தங்களின் வீடுகளில் பிரியாணி தயார் செய்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்து கொண்டனர்.

கம்பம்

கம்பத்தில் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் வாவேர் பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் பாக்கவி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. இது கம்பம் பாரஸ்ட் சாலை, எல்.எப். மெயின்ரோடு, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாக வாவேர் பள்ளி வாசலில் நிறைவடைந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுப்பள்ளிவாசல், வாவேர் பள்ளி தெரு, கம்பம்மெட்டு காலனி, மைதீன் ஆண்டவர் பள்ளி, தாத்தப்பன்குளம், ஓடைக்கரைதெரு உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பெரியகுளம்

பெரியகுளத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் அழகர்சாமிபுரத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஈத்கா மைதானத்திற்கு சென்று அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். 

போடி
போடி புதூர் பள்ளிவாசலில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் முஸ்லிம்கள் புதூர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பெரிய பள்ளிவாசலை அடைந்தனர்.

உத்தமபாளையம்
உத்தமபாளையத்தில் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தலைவர் தர்வேஷ் மைதீன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று மெயின்பஜார், கோட்டைமேடு, கிராம சாவடி, பைபாஸ் வழியாக சென்று உத்தமபாளையம் ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு பெரியபள்ளிவாசல் இமாம் மதார் மைதீன் உலவி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து இருந்தனர். தொழுகையில் பங்கேற்ற பின்பு அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி  ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்தியா உலக அளவில் வல்லரசாக மாற வேண்டும். நாட்டில் அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது. உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Next Story