தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடந்தது.
தீத்தடுப்பு பயிற்சி
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் செயல்முறை விளக்கம், அவசரகாலங்களில் வெளியேறுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று தீயணைப்பு மீட்புபணித் துறை இயக்குநர் ரவி உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கும் வகையில் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, டீன் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல்முறை விளக்கம்
தொடர்ந்து ஆஸ்பத்திரியில்அவசர காலங்களில் எவ்வாறு வெளியேற வேண்டும், தீயணைப்பு முறைகள், தீயணைப்பான்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
அவசர காலத்தில் இடர்பாடுகளில் இருந்து வெளியேறுதல், பாதுகாப்பாக நோயாளிகளை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றுதல், உயர் மாடிகட்டிடத்தில் தீவிபத்தின் போது கட்டிடத்தில் சிக்கி உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பொம்மைகள் வைத்து தத்ரூபமாக செயல்முறை விளக்க காட்சிகள் நடத்தி காண்பிக்கப்பட்டன.
மேலும், ஆஸ்பத்திரிகளில் தீ பாதுகாப்பு குழு அமைத்து, காலமுறையாக தீபாதுகாப்பு சாதனங்களை கையாளுதல் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டும், அவசரகாலங்களில் பொதுமக்கள், நர்சுகள், டாக்டர்கள் பாதுகாப்பாக வெளியேறும் பயிற்சிகள் காலமுறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முத்துப்பாண்டியன், நிலைய அலுவலர்கள் சகாயராஜ், கோமதி அமுதா, ரோஷன் மற்றும் நிலைய பணியாளர்கள், 20 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story