தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 May 2022 8:37 PM IST (Updated: 3 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து நிர்வாக அனுமதியோ அல்லது நெடுஞ்சாலைத்துறை நிர்வாக அனுமதியோ இன்றி ஒருசிலர் சாலையில் கான்கிரீட் கலவைகளை கொண்டு வேகத்தடை அமைத்துள்ளனர்.  அதன் மீது வர்ணம் பூசப்படாமல்  உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி, புதுக்கோட்டை.


தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் ஊராட்சியில் செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மையம் அமைக்கப்பட்டது. பயன்பாடு இன்றி உள்ள இந்த மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த ஊராட்சி நிர்வாகம் இம்மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதினை சீரமைத்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த  ஊராட்சி  நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
 குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர். 

புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் 
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி செல்வநகரில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தை குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு பல்வேறு கோளாறுகள் காரணமாக இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்த சுகாதார வளாகம் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரமேஷ், செல்வநகர், கரூர். 



Next Story