குடிநீர்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


குடிநீர்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 May 2022 8:41 PM IST (Updated: 3 May 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

நாசரேத்:
நாசரேத் அருகே குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் திட்டம்
 நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சிக்கு உட்பட்ட ஞானராஜ் நகரில் கடையனோடையில் இருந்து குடிநீர் குழாய் அமைக்க ரூ.15 லட்சத்திலும், ஞானராஜ் நகரில் சம்ப் அமைப்பதற்கு ரூ.7 லட்சத்திலும், குடிநீர் குழாய் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.7 லட்சத்திலும், ஆக மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆழ்வார்திருநகரி ஒன்றிய குழுத்தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன். வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலைஅரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய திட்டபணிகளுக்கு தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். இதில் ஏரல் தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஜெயக்குமார் ரூபன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சங்கர் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன் குமார் தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் அய்யா துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாகுபுரம்
 சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான  குடியிருப்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த குடும்பத்தினர் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், பாட்டு போட்டிகள், ஆடல் பாடல், பல குரலில் பேசுவது, இசை கச்சேரி, போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, குடியிருப்பில் வசிக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ் குமார், ஆத்தூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவீன்குமார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ராமஜெயம், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் வழிபாடு 
தென்திருப்பேரை திருவரங்க செல்வி அம்மன் கோவில் கொடை விழாவில் நேற்று காலை 7 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.  இரவு 8 மணிக்கு அம்பாள் திருவரங்க செல்விக்கும், தங்கச்சி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு மது சப்பரம் வீதிகளில் வந்தது. இரவு 12 மணிக்கு படைப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டார். 
இன்று(புதன்கிழமை) காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு கும்பம் வீதி உலா வரும் காட்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை யாதவர் சமுதாயம் அறக்கட்டளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

Next Story