பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகை
இறைவேதமான குர்ஆன் மனித குலத்துக்கு அருளப்பட்ட ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஈகைப்பெருநாளான ரம்ஜானை சிறப்பாக கொண்டாடுவர். அந்த வகையில் 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருப்பூரில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்தும், இனிப்பு வழங்கியும், பரிசு கொடுத்தும், ஏழை, எளியவர்களுக்கு பொருள், பணம், பிரியாணி கொடுத்தும், ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர். திருப்பூர் பெரியபள்ளிவாசலில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடந்தது. பின்னர் தொழுகை முடிந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைமை அலுவலகம் முன் திருப்பூர் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா தலைமையில் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் முப்தி சல்மான் பாரிஸ் பாகவி ஹஜ்ரத் கொடியேற்றி வைத்தார். இதில் அனைத்து ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் திரளாக தொழுகையில் பங்கேற்றனர். வெங்கடேஷ்வரா நகரில் உள்ள திடலில் என்.டி.எப். சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றார்கள். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதுபோல் செரங்காடு, யாசின்பாபுநகர், விஜயாபுரம், எம்.எஸ்.நகர், மங்கலம், ஜி.கே.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழுகை நடத்தி வந்த நிலையில் நேற்று கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story