காசுகளாக மாறிய 10 ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை
காசுகளாக மாறிய 10 ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை
போடிப்பட்டி:
கடந்த சில ஆண்டுகளாக பரப்பப்பட்ட வதந்திகளால் செல்லாக் காசுகளாக மாறிய 10 ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வதந்தி
பணம் இல்லாவிட்டால் பல மனிதர்கள் செல்லாக் காசாகி விடுகிறார்கள். ஆனால் செல்லும் காசே செல்லாக் காசாகும் நிலை சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா என பல காசுகள் செல்லாக் காசுகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாக்கப்பட்ட கதை அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியோ, அரசோ உத்தரவிடாத நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் வணிகர்கள் மட்டுமல்லாமல் பஸ்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த துறையினரும் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாதாரணமாக புழங்கும் 10 ரூபாய் நாணயம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் செல்லாக் காசாகியுள்ளது புரியாத புதிராக உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சொற்ப பணத்துடன் வரும் நபர்கள் திணறும் நிலை ஏற்படுகிறது.
செல்லாது
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
முதல் முதலில் 2010-ம் ஆண்டில் தான் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. பின்னர் தலைவர்களின் நினைவாக பல வடிவங்களில் 10 ரூபாய் நாணயம் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டங்களில் குறிப்பிட்ட சில அடையாளத்துடன் கூடிய 10 ரூபாய் நாணயங்கள் போலியானவை என்பது போன்ற வதந்தி பரப்பப்பட்டது.
இதனால் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக அனைத்து விதமான 10 ரூபாய் நாணயங்களும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. ஆனாலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் இன்று வரை செல்லாதாகவே உள்ளது. சமீப காலங்களாக 10 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லாத நிலை உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது.
விழிப்புணர்வு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்கள், அவற்றின் வடிவங்கள் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகள் முன்வர வேண்டும்.
மேலும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் தயக்கமின்றி 10 ரூபாய் நாணயங்களை வாங்க முன்வர வேண்டும். பல குடும்பங்களின் உண்டியல்களில் முடங்கிக் கிடக்கும் 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story