தற்கொலை செய்வது போல அடிக்கடி கனவு வந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோகம்
தற்கொலை செய்வது போல அடிக்கடி கனவு வந்ததால் மனஉளைச்சலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.
பெங்களூரு :
தற்கொலை செய்வது போல கனவு
பெங்களூரு கெங்கேரியை சேர்ந்தவர் மங்களா (வயது 44). இவரது மகன் மஞ்சுநாத் (20). இவர் செல்போன் பழுது நீக்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத் டி.வி.யில் ஒரு படம் பார்த்தார். அந்த படத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் காட்சி இடம்பெற்று இருந்தது. இதனை பார்த்து மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.
இதன்பின்னர் இரவில் தூங்கும்போது மஞ்சுநாத்துக்கு தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது போல அடிக்கடி கனவு வந்து உள்ளது. இதனால் அவர் மனஉளைச்சலில் சிக்கி தவித்து உள்ளார். மேலும் இதுபற்றி தனது தாயிடமும் கூறி இருந்தார். மஞ்சுநாத்துக்கு ஆறுதல் கூறிய மங்களா, ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாகவும் கூறி இருந்தார்.
தூக்குப்போட்டு...
இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களா வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மஞ்சுநாத் திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற மங்களா வீட்டிற்கு வந்து பார்த்த போது மஞ்சுநாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி அறிந்த கெங்கேரி போலீசார் அங்கு சென்று மஞ்சுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொள்வது போல கனவு வந்ததால், மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story