பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
பகுதி நேர வேலை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு இவருக்கு கமிஷன் அடிப்படையில் பகுதி நேர வேலை வழங்குவதாக சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக அவர் செல்போன் மூலம் விசாரித்தார். அப்போது ரூ.200 முதலீடு செய்தால் ரூ.180 கமிஷனாக கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி அவர் கடந்த 9 மாதங்களில் ரூ.8 லட்சத்து 82 ஆயிரத்து 517 முதலீடு செய்தார். இந்த தொகை மற்றும் அதற்குரிய கமிஷன் தொகையை ஆன்லைன் வழி பணப் பரிமாற்றம் மூலம் பெற முயன்றார். ஆனால் பணத்தை பெற முடியவில்லை. இதனால் இணையவழி வாடிக்கையாளர் புகார் மையம் மூலமாக புகார் செய்தார்.
ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் முதலீடு செய்த தொகை மற்றும் கமிஷன் தொகையை திரும்ப பெற கட்டணமாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த தொகையையும் முருகன் ஆன்லைன் பண பரிமாற்றம் மூலம் செலுத்தியுள்ளார்.
அதன்பின்னரும் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மொத்தம் ரூ.11 லட்சத்து 40 ஆயிரத்து 517 மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story