ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை-திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.
தர்மபுரி:
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்த நிலையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
டேக்கிஸ்பேட்டை மசூதி மற்றும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தர்மபுரி பி.ஆர். சீனிவாசராவ் தெருவில் உள்ள மேலத்தெரு சுன்னத் ஜமாத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி பகுதிகளில் உள்ள மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மழையால் ரத்து
தர்மபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ராமாக்காள் ஏரிக்கரை அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இங்கு சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பு தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த இடத்தில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தந்த பள்ளிவாசல்களிலேயே சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
அரூர், மொரப்பூர்
இதேபோல் அரூர் பெரியார் நகரில் உள்ள மைதானத்தில் முத்தவல்லி சபீர் அகமத் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் முத்தவல்லி அன்சார் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் உலக நன்மை வேண்டியும், அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழவும் சிறப்பு தொழுகை நடந்தது.
காரிமங்கலத்தில் பாலக்கோடு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் முத்தவல்லி பாபு தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story