ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
விழுப்புரம்
ரம்ஜான் பண்டிகை
ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம்கள் சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல், மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல், புதுச்சேரி சாலையில் உள்ள ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்பட விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
வாழ்த்து பரிமாற்றம்
இதேபோல் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், கீழ்பெரும்பாக்கத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். நேருக்கு நேர் வாழ்த்துகளை தெரிவிக்க முடியாதவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போன்களில் வாட்ஸ்-அப், முகநூல் மூலமாக வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
மேலும் தொழுகைகள் முடிந்ததும் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டதோடு உறவினர்கள், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து மகிழ்ந்தனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் மஸ்தான் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். செஞ்சி கோட்டையில் உள்ள சதாத்துல்லாகான் மசூதியில் செஞ்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் சையத் மஜீத் பாபு தலைமையில் டாக்டர் சையத் சத்தார் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக அவர்கள் செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சிக் கோட்டைக்கு வந்தனர். இதே போல் மீனம்பூர், பள்ளியம்பட்டு, அனந்தபுரம், ஆலம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி கீழ் மாடவீதியில் உள்ள ஜும்மா மசூதியில் காலை 7 மணியளவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சிராஜுதீன் மவுலான மவுலவி, அக்பர் அலி மவுலான மவுலவி, ஜெய லாவுதீன் மவுலான மவுலவி ஆகியோர் தலைமையில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஓயிட் மசூதியின் அருகில் உள்ள கபர்ஸ்தானை சென்றடைந்தனர். தொடர்ந்து அங்கு காலை 7.55 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் பயான் ஓதப்பட்டது. இது முடிந்ததும் முஸ்லிம்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் ஆர கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதில் வீடுர், பெரியதச்சூர் மற்றும் விக்கிரவாண்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூரில் ஜமாத்தினர் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். பின்பு முத்தவல்லி பாஷா பட்டேல் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்பு ஏழைகளுக்கு தான, தர்மங்கள் செய்தனர். இதேபோல் அவலூர்பேட்டை, சங்கிலிக்குப்பம், நீலாம்பூண்டி, பத்தியப்பேட்டை, செவலபுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜானை முன்னிட்டு ஜமாத்தினர் சிறப்பு தொழுகை செய்தனர். திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழு கையில் ஏராளமானமுஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story