“சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை”-மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு பேட்டி


“சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை”-மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு பேட்டி
x
தினத்தந்தி 4 May 2022 1:27 AM IST (Updated: 4 May 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறினார்.

மதுரை, 

சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறினார்.

உறுதிமொழி சர்ச்சை

  மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, டீனாக இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
  இது ஒருபுறமிருக்க, இந்த சம்பவத்தின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து, துறை ரீதியாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் மருத்துவ கல்வி இயக்குனரகத்தை சேர்ந்த சிறப்பு குழு ஒன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்தது. அந்த குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மருத்துவ கல்வி இயக்குனர்

  இதற்கிடையே உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று வந்தார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன் ரத்தினவேல், தற்போதைய பொறுப்பு டீன் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம், மதுரை மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.
  பின்னர் நாராயண பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
  மாணவர்கள், டீன் உள்ளிட்ேடாரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டுமே, உத்தரவு அல்ல.

நடவடிக்கை

  பிப்ரவரி 10-ந் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அதையும் மீறி சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்ட போது பொறுப்பு முதல்வர் தனலெட்சுமி களத்தில் இல்லை என விசாரணையில் தெரிவித்து உள்ளார். விசாரணை அறிக்கை அடிப்படையில் டீனை மீண்டும் நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story