தேரோட்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுரை
தேரோட்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அறிவுறுத்தினார்
கும்பகோணம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.இதில் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் மாநகராட்சி துணைமேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் செந்தில் முருகன், சுகாதார அலுவலர் பிரேமா, கும்பகோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கோவில் நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி, தேரோட்ட நெறியாளர் சத்யநாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்பு
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர், தமிழகத்தில் உள்ள தேர்களில் 3-வது பெரிய தேர் ஆகும். வருகிற 14-ந் தேதி நடக்கும் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு முக்கியமானதாகும்.
ஆகவே, சாலையின் அகலத்தை ஆய்வு செய்து தேர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். குறிப்பாக மின்வாரிய அதிகாரிகள் 3 குழுக்கள் அமைத்து தேர் செல்லும் வழி மற்றும் அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்பழகன் எம்.எல்.ஏ.
கூட்டத்தில், அன்பழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், தேர்த் திருவிழாவை எந்த அளவுக்கு சிறப்பாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்த வேண்டும். ஆகம விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இந்த அரசு மக்களின் தேவை, எதிர்பார்ப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. இந்த தேரோட்ட விழாவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தேரோட்டத்தை மக்கள் பாராட்டும்படி நடத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story