கடற்கரைக்கு சென்ற வாலிபர் எங்கே?
சொத்தவிளையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மாயமானார். அவரது மோட்டார் சைக்கிள், செல்போன் அனாதையாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்:
சொத்தவிளையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மாயமானார். அவரது மோட்டார் சைக்கிள், செல்போன் அனாதையாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பர்னிச்சர் கடை ஊழியர்
நாகர்கோவில் அருகே உள்ள கீழமறவன்குடியிருப்பு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 24). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பறக்கையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கிருஷ்ணகுமார் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருஷ்ணகுமார் வேலை செய்யும் கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் உடல் நலம் சரியில்லை எனக் கூறி காலையிலேயே விடுப்பு எடுத்து சென்றதாக தெரிவித்தனர். ஆனால், கிருஷ்ணகுமார் எங்கு சென்றார் என்பது பற்றிய விவரம் தெரியாமல் இருந்தது.
அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிள்
கிருஷ்ணகுமாரின் நண்பர்களிடம் விசாரித்த போது சொத்தவிளை கடற்கரையில் நிற்பது போன்று செல்பி எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியதாக கூறினர். இதையடுத்து பெற்றோர் கடற்கரைக்கு சென்று தேடினர்.
அங்கு அவர் இல்லை. அதே நேரம் கிருஷ்ணகுமாரின் மோட்டார் சைக்கிள் கடற்கரையில் அனாதையாக நின்றது. அதன் அருகே அவர் கொண்டு சென்ற உணவு பையும், செல்போனும் இருந்தன.
இதனால் அவர் கடலில் விழுந்தாரா? அல்லது வேறு எங்கேயாவது சென்றிருப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிைலயத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிருஷ்ணகுமாரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story