கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- ஈரோட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி


கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- ஈரோட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 4 May 2022 3:00 AM IST (Updated: 4 May 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஈரோடு
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதிய எழுச்சி
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய எழுச்சியுடன் பா.ஜ.க. வீறுநடை போட்டு வளர்ந்து வரும் இயக்கமாக உள்ளது. எதிர்கால தமிழகம் பா.ஜ.க.தான்.
 ஆட்சிக்கு வரமோட்டோம் என்ற தைரியத்தில் ஏராளமான வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு, தற்போது நிறைவேற்ற முடியாமல் தி.மு.க. திணறி வருகிறது.
மின்தடை
தமிழகத்தில் மின்தடைக்கு மத்திய அரசை குறைகூறுவதா? அப்படியென்றால் இதுவரை சீரான மின் வினியோகத்துக்கு மத்திய அரசே காரணம் என்று குறிப்பிடுவார்களா? நிலக்கரியை மத்திய அரசு அனுப்புவதில்லை என்று கூறுகிறார்கள். அதேசமயம் நிலக்கரிக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை தொடர்பாக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மின்உற்பத்திக்காக ஏதாவது ஒரு புதிய திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய பா.ஜ.க. ஆட்சி மறுப்பு தெரிவித்து உள்ளதா? எனவே புதிய திட்டங்களை தொடங்கி தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தி.மு.க. அரசு முன்வர வேண்டும். மின்வெட்டு என்பது தி.மு.க.வுடன் ஒட்டி பிறந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்துவிடும்.
ஜி.எஸ்.டி. தொகையை மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுவது தவறானது. வசூலிக்கப்பட்ட பணம் வழங்கப்பட்டு விட்டது. வரி சலுகை மட்டும்தான் நிலுவையில் உள்ளது. அதுவும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை உள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது.
சமஸ்கிருதம்
உருது மொழியில் நகரசபை தலைவர் பேசுவதை ஏற்றுக்கொள்பவர்கள், சமஸ்கிருத மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அவரவர் தாய் மொழி அவரவர்களுக்கு உன்னதமானது. சமஸ்கிருதம் உன்னதமான மொழி என்று கூறினால், அப்போது தமிழ் மொழி உன்னதமானது இல்லையா? என்று கேட்கிறார்கள். 
சமஸ்கிருதத்தைவிட தமிழ் மொழி தொன்மையானது என்று பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே கூறிஉள்ளார்.
கச்சத்தீவை மீட்க..
பஞ்சு விலை உயர்ந்துவிட்டதால், நூல் விலையும் உயர்ந்து உள்ளது. எனவே பஞ்சுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இதனால் பஞ்சு தட்டுப்பாடு குறைந்து, விலை குறையும். இலங்கை தமிழர்கள் நலனில் பா.ஜ.க. எப்போதும் அக்கறையுடன் செயல்படும். அதன்அடிப்படையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். அப்போது, மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், கலைவாணி, மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story