‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த கட்டிடம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நல்லூர் ஊராட்சியில் பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், ஆத்துக்கொட்டாய், ரெட்டியூரான்கொட்டாய், எருதுகூடஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். பல வருடங்களாக ஊராட்சி மன்றக் கட்டிடம் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும் அலுவலகத்தில் உள்ள கழிப்பறை சுகாதாரம் இல்லாமல் காட்சி அளிக்கிறது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரத், நல்லூர், தர்மபுரி.
====
பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூர் ஊராட்சி செங்கம்பட்டி கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டம் மூலமாக பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது. அந்த கழிப்பறை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கின்றன. பொதுமக்கள் நலன் கருதி பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், செங்கம்பட்டி, கிருஷ்ணகிரி.
=====
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி ரோட்டில் வேகத்தடைகள் இல்லை. இதனால் சாலை கடக்கும்போது இருசக்கர வாகனங்கள், நடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல் பங்க் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை வேகத்தடைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபதி, கூடச்சேரி, நாமக்கல்.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் கன்னங்குறிச்சி 10-வது வார்டு நாராயணன் தெரு மற்றும் வி.கே. பெருமாள் தெரு சந்திக்கும் இடத்தில் சாக்கடை கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டன. 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் சாக்கடை கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாந்தமூர்த்தி, கன்னங்குறிச்சி, சேலம்.
====
தாழ்வாக தொங்கும் மின் வயர்கள்
சேலம் மாநகராட்சி 54-வது வார்டு தர்மலிங்கம் 1-வது தெருவில் மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இப்பகுதியில் உள்ள மரக்கிளைகள் மின் வயர்களின் மீது உரசுவதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. லேசான காற்று அடித்தாலும் வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் மின்வயர்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
-கோபால், தாதகாப்பட்டி, சேலம்.
===
சேலம் தாரமங்கலம் 6-வது வார்டு பாவடி ஆறுமுகம் தெருவில் வீட்டின் அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை உயர்த்தி கட்டி தர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தாரமங்கலம், சேலம்.
====
நிறுத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுமா?
சேலம் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலார்பேட்டை (06412) மற்றும் ஜோலார்பேட்டை- ஈரோடு (06411) ஆகிய ரெயில்களும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இயக்கப்படுகிறது, ஏற்கனவே இயக்கப்பட்ட ஜோலார்பேட்டை- ஈரோடு (56845), ஈரோடு- ஜோலார்பேட்டை (56846) ஆகிய 2 ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த ரெயில்கள் மூலம் திருப்பத்தூர், காகங்கரை, சாமல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, சங்ககிரி, பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். எனவே இயக்கப்படாமல் இருக்கும் ஈரோடு- ஜோலார்பேட்டை (56846), ஜோலார்பேட்டை- ஈரோடு (56845) ஆகிய 2 ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், சிவதாபுரம், சேலம்.
Related Tags :
Next Story