பெயர்ந்து கிடக்கும் சாலையால் பழுதடையும் ஆம்புலன்ஸ்கள்


பெயர்ந்து கிடக்கும் சாலையால் பழுதடையும் ஆம்புலன்ஸ்கள்
x
தினத்தந்தி 4 May 2022 7:40 PM IST (Updated: 4 May 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

பாட்டவயல் அருகே பெயர்ந்து கிடக்கும் சாலையால் ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து விடுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்

பாட்டவயல் அருகே பெயர்ந்து கிடக்கும் சாலையால் ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து விடுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

தார்சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாட்டவயல் அருகே இருவரிகொல்லி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கல்பராமுக்கு பாலம் வரை செல்லும் மண்சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. எனவே தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதை ஏற்று கூடலூர் ஊராட்சி ஒன்றியமும், சேரங்கோடு ஊராட்சியும் இணைந்து இருவரிகொல்லியில் இருந்து கல்பராமுக்கு பாலம் வரை தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடும் அவதி

இதன் காரணமாக நாளடைவில் சாலை உடைந்து மீண்டும் குண்டும், குழியுமாக மாற தொடங்கியது. இதை சீரமைத்து தரக்கோரி அதிகாரிகளை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அந்த சாலை முழுவதுமாக பெயர்ந்து, அங்கு போடப்பட்ட ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள தார்சாலை மழை உள்ளிட்ட காரணங்களால் பெயர்ந்து கிடக்கிறது. அங்கு ஜல்லிக்கற்கள் மட்டுேம உள்ளது. இதனால் அவசர தேவைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நடுவழியில் பழுதாகி நின்று விடுகின்றன. இதனால் வாடகை வாகனங்கள் எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. நோயாளிகள், கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் நிலை உள்ளது. சாலையை சீரமைத்து தர அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் முன்வந்து, சாலையை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story