சூறாவளி காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன
கூடலூர், பந்தலூரில் சூறாவளி காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர், பந்தலூரில் சூறாவளி காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
சூறாவளி காற்றுடன் மழை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி மண் வயல் பகுதியை சேர்ந்த தீபாவளி என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. மேலும் நாடுகாணி தபால் நிலைய பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவரது வீட்டின் மீது மரம் சாயந்து விழுந்தது. இதில் அவரது வீடு சேதம் அடைந்தது.
கோவில் கோபுரம் சேதம்
மேலும் புளியம்பாரா, செளுக்காடி பகுதியில் வாழைகள் முறிந்து விழுந்தது. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்ததாக விவசாயிகள் கவலை அடைந்தனர். இதேபோன்று நெலாக்கோட்டை பஜாரில் அபு என்பவரது வீட்டின் மேற்கூரைகள் சூறாவளி காற்றில் பறந்து அருகில் உள்ள மாரியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரத்தின் உச்சியில் இருந்த கலசம் கீழே விழுந்தது.
மேலும் கோபுரம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் பல இடங்களில் பாகற்காய் உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதமடைந்தது. சேதமடைந்த இடங்களை வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
இது தவிர சேரம்பாடி அருகே கோரஞ்சாலில் கீதா என்பவரது தோட்டத்தில் இருந்த மரம் சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. மேலும் நெலாக்கோட்டை, பிதிர்காடு ஆகிய பகுதிகளில் 5 வீடுகள் சேதம் அடைந்தன. சோலாடி ஆதிவாசி காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
அங்கு வசித்தவர்கள் அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த பள்ளியிலும் மரம் சாய்ந்து விழுந்தது. உப்பட்டியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், பொன்னானி, ம்மன்காவு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர்கள் தேவராஜ், விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், கர்ணன், அபிராமி ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story