தூத்துக்குடி மாவட்டத்தில் மழையுடன் கத்திரி வெயில் புதன்கிழமை தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையுடன் கத்திரி வெயில் புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அருகே பனைமரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையுடன் கத்திரி வெயில் புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அருகே பனைமரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
அக்னிநட்சத்திரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரத்தை காட்டியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கிறது. கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். எனவே, பகல் நேரங்களில் குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மழை
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் கத்திரி வெயில் தொடங்கியதை உணர்த்தும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மக்கள் சாலையோர குளிர்பான கடைகளிலும், நீர், மோர் பந்தல்களிலும் குவிந்து காணப்பட்டனர். இந்த வெயிலின் தாக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மதியம் 2 மணிக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. வானம் மேகத்தால் மூடப்பட்டு, இதமான சூழல் நிலவியது. மாலையில் காற்று மற்றும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால் மாலையில் குளிர்ந்த வானிலை நிலவியது. கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பனைமரம்
மேலும் இந்த திடீர் மழை மற்றும் காற்று காரணமாக செக்காரக்குடி பகுதியில் வீடுகளின் அருகே நின்ற ஒரு பனைமரம் திடீரென முறிந்து வீடுகளின் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டு கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதே போன்று மழை காரணமாக கோவில்பட்டி, சாத்தான்குளம், கடம்பூர், மேலஈரால் பகுதிகளில் மின்சாரம் வினியோகத்தில் தடை ஏற்பட்டது.
கயத்தாறு
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. மாலை 3.30 திடீரென மணிக்கு பலத்த இடி மின்னலுடன் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அனல் காற்று வீசிய இப்பகுதியில் இதமான சூழல் உருவானது. இது விவசாயிகள், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story