கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 4 May 2022 8:50 PM IST (Updated: 4 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடைக்கானல்:
கொடைக்கானல் மூஞ்சிக்கல் ஆனந்தகிரி பகுதியில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடியேற்றினர். முன்னாள் நகராட்சி தலைவர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.
கொடியேற்று விழா உபயதாரர்கள் முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், குறிஞ்சி அரிமா சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா, ராம்மோகன் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் முரளி, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் உள்பட நகராட்சி கவுன்சிலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முதல் நாளான வருகிற 8-ந்தேதி காவல்துறை மண்டகப்படி சார்பில் விழா நடக்கிறது. இதையொட்டி அம்மனின் மின் அலங்கார பவனி மற்றும் மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. 13-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் விருந்து உபசாரமும், 15-ந்தேதி மலர் வழிபாட்டு விழா, அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 17-ந்தேதி சக்தி கரகம் எடுத்தல், மாவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
18-ந்தேதி அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், பறவை காவடி பவனி வருதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 24-ந்தேதி பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி மற்றும் ஆனந்தகிரி இந்து இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

Next Story