காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
முத்தூர்,
முத்தூர் - கொடுமுடி சாலை பெருமாள் புதூர் பஸ் நிறுத்தம் அருகில் காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான குடிநீர் வெளியேறி வீணாகிறது.
காவிரி ஆற்று குடிநீர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம் ஆகிய நகர மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முத்தூர் - கொடுமுடி பிரதான சாலையில் பெருமாள்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் கிழபுறம் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து தற்போது வரை ஏராளமான குடிநீர் சாலையோரத்தில் வெளியேறி வீணாகிறது. மேலும் இந்த குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் ஏராளமான தண்ணீர் அருகில் செல்லும் சாக்கடை கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது.
குடிநீர் குழாய் உடைப்பு
மேலும் உடைப்பு ஏற்பட்ட இந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி ஒரே சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் குழாய் உடைப்பினால் தார்ச்சாலை அரிக்கப்பட்டு பிரதான சாலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்தை கடந்து செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருந்து வெளியேறும் குடிநீரை சாலையோரத்தில் வாரி இறைத்தபடி சென்று வருகின்றன. மேலும் உடைப்பு ஏற்பட்ட இந்த இடத்தை கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நகர, கிராம பொதுமக்கள் தார்ச் சாலை நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பினால் காங்கயம், வெள்ளகோவில் நகர பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூலம் முத்தூர் பெருமாள்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குழாய் உடைப்பினால் ஏற்பட்டுள்ள தார்ச்சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று நகர, கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story