இருப்பு வைப்பதால் எடை குறையும் சின்ன வெங்காயம்
இருப்பு வைப்பதால் எடை குறையும் சின்ன வெங்காயம்
பல்லடம்,
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. .இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பிற மாவட்டங்கள், மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை சரிவிலிருந்து தப்பிக்க விவசாயிகள் பலரும் பட்டறை அமைத்துள்ளனர். இருப்பினும், வெங்காயத்தின் எடை குறைந்து வருவது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், பட்டறை அமைத்து பாதுகாக்கிறோம். வெங்காயத்தின் தரம் மற்றும் எடை அடிப்படையில் தான் வியாபாரிகள், விலையை நிர்ணயிக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பட்டறையில் இருப்பு வைத்துள்ள வெங்காய எடை குறைந்து வருகின்றன. 10 டன் வெங்காயம் வைத்தால், ஓரிரு மாதத்தில், 8 டன்னுக்கும் கீழ் எடை குறைகிறது. மூன்று மாதங்கள் வரை இருப்பு வைக்க முடியும்.
அவ்வாறு வைக்கும் போது மேலும் எடை குறைய வாய்ப்பு உள்ளதால்,நஷ்டமே ஏற்படும்.தக்காளி, வெங்காயத்துக்கு ஆதார விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story