பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்-தேர்வுகள் துறை இணை இயக்குனர் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத வரும் மாணவ, மாணவிகள் தவறாமல் முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் கூறினார்.
நாமக்கல்:
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். தேர்வுத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் மாவட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு பொறுப்பாளரும், அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனருமான பொன்குமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முககவசம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் தவறாமல் முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். போதிய சமூக இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். செல்போன் கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும். மாணவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே, தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். பொதுத்தேர்வில் பிட் அடிக்கும் மாணவர்களுக்கு, அரசு விதிமுறைப்படி தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல், சிறப்பாக தேர்வை முடிக்க அனைத்து துறை அலுலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பள்ளி ஆய்வாளர் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story