அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி


அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2022 11:32 PM IST (Updated: 4 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் எருமப்பட்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

எருமப்பட்டி:
அக்னி நட்சத்திரம் தொடங்கியது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒரு வாரத்துக்கு முன்பு வரை வெயில் கொழுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையிலும், மாலையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 7 மணி அளவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சூறைக்காற்றுடன் பலத்த மழை
எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முட்டாஞ்செட்டி மாரியம்மன் கோவில் அருகே சூறைக்காற்றுக்கு மின்கம்பி அறுந்து விழுந்தது. பொதுமக்கள் டிரான்ஸ்பார்மரில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்பாதை ஆய்வாளர் ஜெயராமன், உதவி ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் கனமழையையும் பொருட்படுத்தாது, அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல்லை பொறுத்த வரை நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் இரவில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story