திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை
அக்னி நட்சத்திர தொடக்க நாளில் திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி கூரை வீடு, தென்னை மரங்கள் எரிந்து நாசமடைந்தன.
திருவாரூர்;
அக்னி நட்சத்திர தொடக்க நாளில் திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி கூரை வீடு, தென்னை மரங்கள் எரிந்து நாசமடைந்தன.
கனமழை
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்தமான் அருகே 6-ந் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மேலும் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயில் சுட்டெரித்தது. இந்த சூழ்நிலையில் திருவாரூரில் மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் இடியுடன் கன மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. கோடை வெயில் உஷ்ணத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த மழையினால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது. இருப்பினும், அவ்வப்போது மேகமூட்டம் சூழ்ந்து மழை வருவது போல் தென்பட்டது. ஆனால், நேற்று பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. இந்தநிலையில் மாலை 4 மணியளவில் வெயில் அடித்துக் கொண்டிருக்கும் போதே பலத்த ஓசையுடன் இடி இடித்தது. இதைத்தொடர்ந்து பலத்த காற்று வீசியது. அதன்பின்னர் லேசாக தூறலுடன் தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்து பலத்த மழையாக பெய்தது.
வாழைமரங்கள் சாய்ந்தன
கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்தது. வாழை மரங்கள் மற்றும் முருங்கை மரங்கள் சாய்ந்தன.
மின்னல் தாக்கியது
மழை பெய்த போது கூத்தாநல்லூர் அருகே கமலாபுரத்தில் தேவேந்திரன் (வயது62) என்பவரது கூரை வீடு மீது மின்னல் தாக்கியது. இதனால் கூரை வீடு தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதேபோல், வடபாதிமங்கலத்தில் மின்னல் தாக்கியதில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மின்னல் தாக்கி கூரைவீடு மற்றும் தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story