சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்


சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்
x
தினத்தந்தி 4 May 2022 11:47 PM IST (Updated: 4 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

குரங்கணி மலைப்பகுதியில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.

போடி: 

போடி அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குரங்கணி மலை உள்ளது. இங்கு குரங்கணி, கொட்டக்குடி, சென்ட்ரல், முட்டம், டாப் ஸ்டேஷன், காரிப்பட்டி, நரிப்பட்டி போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இயற்கை அழகு மிகுந்த இந்த இடங்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் இங்குள்ள சாம்பலாற்றில் குளித்து மகிழ்கின்றனர். 

இந்நிலையில் கொட்டக்குடி ஊராட்சி போடியில் இருந்து குரங்கணி செல்லும் சாலையில் உள்ள கொம்பு தூக்கி என்னும் இடத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குரங்கணி மலைப்பகுதிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, ஆட்டோ, ஜீப், காருக்கு ரூ.30, வேன் ரூ.75, பஸ் மற்றும் லாரிக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து கொட்டக்குடி ஊராட்சி தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, இந்த நுழைவு கட்டணம் வசூல் நாளை (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் தான். பொதுமக்களுக்கு கிடையாது. மேலும் இந்த கட்டணத்தை ஊராட்சி நிர்வாகமே வசூல் செய்யும் என்றார். 


Next Story