தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி
கீழே விழும் நிலையில் மின் கம்பம்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் புதூர் ஓடைத்தாங்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு மின் கம்பம் சரிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உயரழுத்த மின் வயர்கள் மக்களின் கைக்கு எட்டும் தூரத்தில் தாழ்வாக உள்ளன. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், மங்கலம்.
டிரான்ஸ்பார்மரில் படரும் செடி-கொடிகள்
வேலூர் அருகே சேண்பாக்கத்தில் ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இதன் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் ஒரு மின் கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்துள்ளது. அதனை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேந்திரன், சேண்பாக்கம்.
ஊராட்சி நூலகத்தை திறக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தி வரும் நிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நூலகம் சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துப் படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் உடனடியாக நூலகத்தை திறக்க வேண்டும்.
-சுரேஷ், வீரராகவபுரம்.
டவுன் பஸ் வசதி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சேத்துப்பட்டு, வந்தவாசி போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். அதேேபால் சேத்துப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். கீழ்பென்னாத்தூர்- சேத்துப்பட்டு நேர்வழியில் அவலூர்பேட்டை வழியாக அரசு பஸ்கள் இயங்காததால் கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்து சேத்துப்பட்டு, வந்தவாசிக்கு செல்கின்றனர். இதனால் நேரம், பணம் விரயம் ஆகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கீழ்ெபன்னாத்தூர், சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்.
-விக்ரம், கீழ்பென்னாத்தூர்.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடிமதுரா மேலக்கொடி கிராமத்தில் 500 பேர் வசிக்கின்றனர். அவர்கள் போளூர் மற்றும் கலசபாக்கம் செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல ேவண்டும். ஆகையால் போளூர்-கீழ்குப்பம் செல்லும் பஸ்சை (பி4பி) மேலக்கொடி வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கணேசன், கடலாடி.
உடைந்த கான்கிரீட் சிலாப்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வீதி செல்லும் முக்கிய தெருவின் வளைவில் சாலையோரம் உள்ள கால்வாயின் கான்கிரீட் சிலாப் உடைந்து சேதமாகி உள்ளது. இதனால் சாலையில் செல்வோரும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிலாப்பை சரி செய்ய வேண்டும்.
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
குப்பைகளை அகற்ற வேண்டும்
திருப்பத்தூர் நகராட்சி 10-வது வார்டு எஸ்.என்.நகர் பகுதியில் பல இடங்களில் குப்பைகள் கிடக்கிறது. மசூதி அருகில் கம்பம் மட்டும் உள்ளது. அதில் பல்பு இல்லை. அந்த வழியாக வருவோர் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சிரமப்படுகின்றனர். சாலை, கால்வாய் வசதி இல்லை. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சுகாதாரச் சீர்கேடுகளாக உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?
-மொஹைதீன்பீரான், திருப்பத்தூர்.
தேரை மூடி வைப்பார்களா?
ேவலூரை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடந்து முடிந்து 1½ மாதம் ஆகிறது. தேரை மூடி வைக்காமல் வெயிலில் காய்ந்து கொண்டுள்ளது. ரூ.85 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட தேரை சரியான முறையில் பாதுகாக்காமல் வெட்ட வெளியில் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். இதுபற்றி பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரி கேட்பதில்லை. தேரை மூடி வைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகனம், விரிஞ்சிபுரம்.
தண்ணீர் இணைப்பு துண்டிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கை கழுவுவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு, தண்ணீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-சுந்தரராஜன், வேலூர்.
Related Tags :
Next Story