சீனிவாச பெருமாள் கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தர எம்.எல்.ஏ. கோரிக்கை
சீனிவாச பெருமாள் கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரவேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழக அரசுக்கு மான்ராஜ் எம்.எல்ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுலா நகரமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ளது. தினந்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும். இந்த கோவிலுக்கு வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி சனி வார திருவிழாவையொட்டி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட படிகளை, ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்வதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் ரோப் கார் வசதி செய்து தரவேண்டும். மேலும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று நடைபெறும் கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி, தங்கும் வசதி செய்து தர வேண்டும். என கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story