தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி


தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி
x

தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் முன்னிலையில் நடந்தது.

விருதுநகர், 
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நடந்தது. 
ஒத்திகை நிகழ்ச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றிய ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நடந்தது. இதில் தீ விபத்தின் போது ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளை எவ்வாறு எவ்வித உபகரணங்களும் இல்லாமல் மீட்பது. 
ஏணிகள், கயிறுகள் மூலம் நோயாளிகளை மீட்பது. தீ விபத்துக்களின் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகட்ட தீயணைக்கும் முறைகள் செய்து காட்டப்பட்டது. 
மீட்பு பணி 
தீயணைப்பு மீட்பு பணி துறை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விரிவுரைகள் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூலம் வழங்கப்பட்டது. 
இதுபோன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் மீட்பு பணி துறையுடன் இணைந்து செயல்பட உதவியாக இருக்க முடியும் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்தார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் கணேசன், தீயணைப்பு துறை உதவி இயக்குனர் மணிகண்டன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story