கரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 12:34 AM IST (Updated: 5 May 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான நேற்று கரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர், 
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் நேற்று `அக்னி நட்சத்திரம்’ என்ற கத்திரி வெயில் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. காலை முதல் மாலை 5 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அனல் காற்றும் வீசியது.
சுட்டெரித்த வெயில் காரணமாக கரூர் மாவட்ட பகுதிகளில் பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். சாலைகளில் ஆங்காங்கே வெயிலின் தாக்கத்தால் கானல் நீர் காணப்பட்டது. 
திடீர் மழை
இரவு 7.45 மணிக்கு பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் கரூர் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையானது தொடர்ந்து இரவு வரை தூறிக்கொண்டே இருந்தது. காலையில் சுட்டெரித்த வெயிலை தாங்க முடியாமல் தவித்த மக்கள், மாலையில் மழை பெய்து குளிர்வித்த சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர். 
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெயில் அதிகமாக அடித்தது. பின்னர் இரவு 8 மணி இருந்து 9 மணி வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, தடா கோவில், புங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. 
நொய்யல்
நொய்யல்,அத்திப்பாளையம், குப்பம், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம்,  குந்தாணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம்,  பசுபதிபாளையம், ஓலப்பாளையம், திருக்காடுதுறை. தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேல் பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
மழை பெய்ய ஆரம்பித்ததும் மின் தடை ஏற்பட்டது. மாணவ-மாணவிகள் இரவு படிக்க முடியாமல் அவதி அடைந்தனர். தரைக்கடை வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல்  அவதியுற்றனர். மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் இரவு பணிந்து முடிந்து வீட்டிற்குள் புறப்பட்டவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
க.பமரத்தி
சின்னதாராபுரம் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனை தொடர்ந்து தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் இரவு 8 மணியளவில் இருந்து 10 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story