காரைக்குடி அருகே விஷ பூச்சிகளிடம் இருந்து காக்க கிராம மக்கள் வழிபாடு


காரைக்குடி அருகே விஷ பூச்சிகளிடம் இருந்து காக்க கிராம மக்கள் வழிபாடு
x

காரைக்குடி அருகே விஷ பூச்சிகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டி கிராம மக்கள் அவற்றின் மண் உருவ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வினோத வழிபாடு நடத்தினர்.

காரைக்குடி, 
காரைக்குடி அருகே விஷ பூச்சிகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டி கிராம மக்கள் அவற்றின் மண் உருவ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வினோத வழிபாடு நடத்தினர்.
வினோத வழிபாடு
காரைக்குடி அருகே உள்ள காயவயல், கலிப்புலி, மணப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் பண்டைய காலங்களில் அடர்ந்த காடுகளில் வனவிலங்குகள் காணப்பட்டு உள்ளன.  இதையடுத்து அந்த வனவிலங்குகளிடம் இருந்தும், பூரான், பாம்பு, எலி உள்ளிட்ட விஷ பூச்சிகளிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டி மண்ணால் புலி, பாம்பு, பூரான், எலி உள்ளிட்டவற்றின் சிலைகளை செய்து ஊர்வலமாக தூக்கி வந்து வினோத முறையில் வழிபாடு செய்தனர். 
காப்புகட்டு
இந்த விழா பாரம்பரியமாக நடைபெற்று வந்தது.  இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 26-ந்தேதி புலி சிலைக்கு காப்பு கட்டப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து அந்த கிராம மக்கள் விரதம் புலி சிலைக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து பெண்கள் ஆரத்தி எடுத்த பின்னர் கிடாய் பலி கொடுத்த பின்னர் புலி, பாம்பு, பூரான், எலி உள்ளிட்டவைகளின் சிலைகளை கிராம மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கலிப்புலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தை வரம் வேண்டிய தம்பதிகள் குழந்தைகள் சிலைகளையும் எடுத்து வந்து நேர்த்திக்கடன்செலுத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள்  கூறியதாவது:- 
காயாவயல், கலிப்புலி மற்றும் மணப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஏராளமான புலிகள் இருந்தன. அப்போது இந்த கிராமத்தில் உள்ள முன்னோர்கள் விவசாயம் உள்ளிட்ட வேலைகளுக்கு செல்லும்போது புலிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் இந்த கிராமத்தில் புலி சிலையை உருவாக்கி அவற்றை வணங்கி வந்துள்ளனர். 
 வழிபாடு
பூரான், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளிடம் இருந்தும் காத்துக்கொள்ள அவற்றின் உருவம் கொண்ட மண் சிலை களை எடுத்து வந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வணங்கி உள்ளனர். இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் பெரும்பாலான காடுகள் விவசாய நிலங்களாகவும், சில இடங்கள் குடியிருப்பாகவும் மாறிவிட்டது. இருந்தாலும் முன்னோர்கள் வணங்கிய இந்த வினோத வழிபாட்டை இன்று வரை தவறாமல் கடைப்பிடித்து வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story