நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்


நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 May 2022 1:39 AM IST (Updated: 5 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற 2 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிய போது,  அந்த பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி குழந்தையை கடித்து குதறியது. இதில் காயமடைந்த முகேனுக்கு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், மேற்பார்வையாளர்கள் பாஸ்கர், காமராஜ் ஆகியோர், செங்கல்பட்டில் இருந்து வந்திருந்த பன்றி பிடிக்கும் தொழிலாளர்களுடன் சென்று நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, சிதம்பரம் தில்லை நகர், காந்திநகர், கோவிந்தசாமி நகர், பழைய புவனகிரி ரோடு, குஞ்சித மூர்த்தி,  விநாயகர் கோவில் தெரு, எடத்தெரு, மின் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். அப்போது,  சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகே வந்த போது, பன்றிகளின் உரிமையாளர்கள்  20-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, கட்டைகள் மற்றும் கற்களுடன் வந்து பன்றிகளை பிடித்து சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்தனர்.  தொடர்ந்து, பன்றிபிடிப்பதற்காக வந்திருந்தவர்களை ஓடஓட துரத்தி சென்று தாக்கினர். இதில் பெண் ஒருவரும் பன்றி பிடிக்க வந்தவரை நடுரோட்டில் வைத்து தாக்கினார். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முற்பட்டனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story