ஆஷா பெண் ஊழியரின் கையை முறித்த கள்ளச்சாராய வியாபாரி
கணவரை தாக்கியதை தட்டிக்கேட்ட ஆஷா பெண் ஊழியரின் கையை முறித்த கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்யவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவமொக்கா: கணவரை தாக்கியதை தட்டிக்கேட்ட ஆஷா பெண் ஊழியரின் கையை முறித்த கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்யவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கணவரை தாக்கியதை தட்டி கேட்டதால்...
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கண்ணங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர், ஆயனூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி ஆஷா ஊழியராக வேலை செய்து வருகிறார். ஸ்ரீதர், கள்ளச்சாராயம் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவர், தினமும் ஹனகெரகட்டே பகுதியை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி திவாகர் வீட்டிற்கு சென்று கள்ளச்சாராயம் குடித்து வந்துள்ளார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வியாபாரி திவாகர் வீட்டு அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த திவாகர், ஸ்ரீதரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவர், ஸ்ரீதரை கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் ஸ்ரீதர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி லட்சுமி, திவாகர் வீட்டிற்கு சென்று கணவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து தட்டி கேட்டுள்ளார்.
ஆஷா ஊழியர் மீது தாக்குதல்
அப்போது திவாகர், லட்சுமியுடன் தகராறு செய்து அவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கையை முறித்துள்ளார். இதில் காயம் அடைந்த லட்சுமியை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லட்சுமி, தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கள்ளச்சாராய வியாபாரி திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
ஆனால் அவரை, போலீசார் கைது செய்யவில்லை. இதனால் லட்சுமி, திவாகரை கைது செய்யவில்லை என குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story